அ.ம.மு.க. கரைகிறது நெல்லை காலியானது
நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அ.ம.மு.க. நிர்வாகிகள் கட்சி மாறத் தொடங்கி விட்டார்கள். நெல்லையில் கட்சியினர் கூண்டோடு, அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் அணியினர் பிரிந்த போது 18 எம்.எல்.ஏ.க்கள் அவருடன் சென்றனர். அது மட்டுமில்லாமல், சில அமைச்சர்களும் அவருக்கு மறைமுகமாக ஆதரவாக இருந்தனர். ஆனால், மத்தியில் உள்ள மோடி அரசு ஆதரவுடன், தினகரன் ஆதரவாளர்களை ரெய்டு போன்ற வழிகளில் வறுத்தெடுத்து, தன் பக்கமாக எடப்பாடி பழனிச்சாமி இழுத்து கொண்டார். தளவாய்சுந்தரத்தில் ஆரம்பித்து பல முக்கிய தலைகளும் இப்படியாக எடப்பாடி ஆதரவாளர்களாக அதிமுகவில் போய் சேர்ந்தனர்.ஆனாலும், நாடளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் உறுதியான வேட்பாளர்களை டி.டி.வி. தினகரன் களமிறக்கினார்.
அவர்கள் யாருமே தேர்தல் முடியும் வரை விலை போகாமல் இருந்ததுடன், தேர்தலில் போராடவும் செய்தார்கள். மேலும், திருச்சி, சிவகங்கை, தேனி உள்பட 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. கடைசியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த 5 தொகுதிகளிலும் கூட ஒரு லட்சத்தை நெருக்கி ஓட்டு வாங்க முடிந்ததே தவிர வேறொன்றும் சாதிக்க முடியவில்லை.
இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியுற்றால், எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும். அப்போது தானாகவே பலர் தம் பக்கம் வருவார்கள் என்று டி.டி.வி.தினகரன் எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட முக்கிய தளகர்த்தாக்களே கட்சி மாறப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும், அவர்கள் அனைவரும் ஜூன் 1ம் தேதி தினகரன் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில், அ.ம.மு.க.வின் நெல்லை மாவட்ட கூடாரம் இன்று காலியாகி விட்டது. நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சின்னத்துரை, மூர்த்தி, எம்.சி.ராஜன், அசன் ஜாபர் அலி, சங்கரபாண்டியன், முத்தையா, குருசேவ், அமுதா பாலசுப்பிரமணியன், வி.எஸ்.மாரியப்பன், சின்னப்பாண்டி, சேகர், காமராஜ் ஆகியோர் உள்பட பலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தாய்க்கட்சியான அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையடுத்து, நெல்லை மாவட்ட அ.ம.மு.க. கூண்டோடு காலியாகிறது. இதே போல், வேறு சில மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகளிடமும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது. எனவே, அ.தி.மு.க.வின் இழுப்பு வேலைகள் தொடரும் என தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், தேர்தலுக்கு முன்பாக தினகரன் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து விட வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கருதுகிறதாம். அதன்மூலம், அவரால் நாடாளுமன்றத் தேர்தலைப் போல் உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உள்ளூர் அரசியல் காரணமாக அ.தி.மு.க.வுக்கு திரும்பிச் செல்ல முடியாத அ.ம.மு.க.வினர் சிலர், தி.மு.க.வில் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை எல்லாம் எப்படி டி.டி.வி. சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.