ஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா மம்தாவின் புதிய முழக்கம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில், ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா’ என்ற புதிய கோஷத்தை எழுப்பியுள்ளார். இதையே அவரது கட்சி நிர்வாகிகளும் பின்பற்றி வைத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கரைந்து போய் விட்டன. அங்கு பா.ஜ.க. முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது, திரிணாமுல் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். மேலும், இந்துத்துவா கோஷம் எழுப்பி, பிரச்சாரம் செய்தனர். அத்துடன், மம்தா பானர்ஜி செல்லும் இடங்களில் பா.ஜ.க.வினர் கூடி நின்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர்.

இப்படி கோஷம் எழுப்பிய சிலரிடம் மம்தா பானர்ஜி வாக்குவாதம் செய்தார். அவர்களை கைதுசெய்யவும் உத்தரவிட்டார். ஆனாலும், வேண்டுமென்றே பா.ஜ.க.வினர் தொடர்ந்து பல இடங்களில் அதையே செய்து வருகின்றனர். மேலும், ஜெய் ஸ்ரீராம் என்று 10 லட்சம் தபால் கார்டுகளில் எழுதி மம்தாவுக்கு அனுப்பப் போவதாக பா.ஜ.க.வின் எம்.பி. அர்ஜூன்சிங் கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா’ என்ற கோஷத்தை மம்தா பானர்ஜி எழுப்பத் தொடங்கியுள்ளார். தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இந்த கோஷத்தை போட்டு, நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், காஜி நஜருல் இஸ்லாம், பகத்சிங் போன்ற தலைவர்களின் படங்களையும் போட்டிருக்கிறார். இதையே அவரது கட்சியினரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

More News >>