2 வருடம் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை மறந்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தவர்களின் பட்டியலை தனது இணைய தளத்தின் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, 2 வருடங்கள் தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் பெயரை சேர்க்க மறந்துவிட்டது.
இந்ததவறை சிலர் சுட்டிக் காட்ட, சில நிமிடங்களில் அவருடைய பட்டியலில் இடம் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக,1885-ல் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.. இக்கட்சியை தோற்றுவித்தவர்கள் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம், தாதாபாய் நௌரோஜி, தின்ஷா எடுல்ஜி ஆகியோர் ஆவர்.
அதன் பின் பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சத்தியமூர்த்தி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, காமராஜர் என்று தியாக சீலர்கள் அலங்கரித்த காங்கிரஸ் தலைவர் பதவியில் தற்போது நேரு குடும்பத்தின் 5-வது தலைமுறையைச் சேர்ந்த ராகுல் காந்தி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி . தொடங்கிய 1885 முதல் தற்போது வரைக்கும் இந்த 135 ஆண்டுகளில் தலைவர் பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலை கட்சியின் இணையதளத்தில் இன்று வெளியிட்டனர். அதில் 1996-ல் நரசிம்மராவுக்கு அடுத்து 96 முதல் 98 வரை தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் பெயரைக் காணவில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ நடந்து விட்ட இந்தத் தவறை, பட்டியலைப் பார்த்தவுடன் காங்கிரஸ் கட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்ல , சில நிமிடங்களில் சீதாராம் பெயர் சேர்க்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட்டு சமாளித்தனர் காங்கிரஸ் இணையதள அறிவு ஜீவிகள்.