மதுரை கலெக்டர் திடீர் மாற்றம்
மதுரை மாவட்டக் கலெக்டர் நாகராஜன் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டக் கலெக்டராக நடாஜன் பணியாற்றி வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் மதுரை தொகுதியின் மின்னணு வாக்கு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. அதன்பிறகு, பெண் தாசில்தார் சம்பூரணம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நான்கு பேர் திடீரென வாக்கு எந்திரங்கள் உள்ள அறைக்கு சென்று சில ஆவணங்களை நகல் எடுத்தனர்.
இது வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கு தெரியவே மதுரை திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் உள்பட வேட்பாளர்கள், எதிர்க்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சம்பூரணம் அவசர, அவசரமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜனும் உடனடியாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனாலும், வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் எதற்காக தாசில்தார் சென்றார்? வாக்கு எந்திரங்களை மாற்றி, ஆளும்கட்சிக்கு அதிக வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மாற்று எந்திரங்களை கொண்டு வந்து வைக்க உதவினாரா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கலெக்டர் மாற்றப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அடங்கி விட்டன. இதற்கிடையே, மதுரை மாவட்ட கலெக்டராக நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
தற்போது தேர்தல் முடிந்ததும் கலெக்டர் நாகராஜன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சிகள் துறை இயக்குனராக தமிழக அரசு நியமித்துள்ளது.
மேலும், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த பாலாஜி மாற்றப்பட்டு, பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு இணை தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட ராஜாராமன், நகர், ஊரமைப்புத் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டக் கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்ட சில நாட்களுக்குள் மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைக்கு மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கலெக்டர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அதே நடராஜனை மீண்டும் கலெக்டராக நியமிக்கக் கூடும் என்றும் பேசப்படுகிறது.