புதுச்சேரியில் நீடிக்கும் அதிகார மோதல்... இப்போது முதல்வர் நாராயணசாமிக்கு தடை
புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை கோரியும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூட்டியுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரியும் ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரிக்க, மத்திய அரசின் வழக்கறிஞரோ, புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் 7-ந் தேதி கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வாதாடினார். இடைக்காலத் தடை விதிக்காவிட்டால், முதல்வர் நாராயணசாமி கொள்கை முடிவு எதுவும் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.
இதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள்,இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. வரும் 7-ந்தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்த 10 நாட்கள் மட்டும் தடை விதிப்பதாகக் கூறி, வழக்கு விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
புதுச்சேரி நிர்வாகம் தொடர்பாக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான அதிகார மோதல் மீண்டும் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால், அம்மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.