சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதை மூலம் விளக்கம்...
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ட்விட்டுக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு கவிதை வெளியிட்டிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி நிதி சவுத்ரி. இவர், மும்பை பெருநகர மாநகராட்சியில் இணை ஆணையராக பணியாற்றி வந்தார். கடந்த மே 17ம் தேதியன்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பு வெளியிட்டார். ‘‘எப்படி ஒரு விதிவிலக்கான 150வது ஆண்டு விழா போய் கொண்டிருக்கிறது. இதுவே சரியான தருணம். ரூபாய் நோட்டுகளில் இருந்து அவர் படத்தை நீக்குங்கள். உலகம் முழுவதும் உள்ள அவரது சிலையை அகற்றுங்கள். நிறுவனங்கள், சாலைகளில் இருந்து அவரது பெயரை நீக்குங்கள். 30.1.1948க்காக நன்றி கோட்சே!’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக இப்படி அவர் ட்விட் போட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், மும்பை பெருநகர மாநகராட்சி முன்பாக போராட்டமும் நடத்தியது. அதே போல், நிதிசவுத்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிராவை ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசின் முதலமைச்சர் பட்நாவிஸுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடிதம் எழுதினார். இதன்பின், நிதி சவுத்ரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, குடிநீர் வழங்கல் துறையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நிதி சவுத்ரி தனது ட்விட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும், மகாத்மா மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், இந்தியில் ஒரு கவிதை எழுதி, அதை ட்விட் செய்திருக்கிறார். அது தனது சொந்த கருத்து என்பதால், இதை யாரும் சர்ச்சையாக்கி விடாதீ்ர்கள் என்றும் கூறியிருக்கிறார். அவர் அளித்த விளக்கத்தில், தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை மனதில் கொண்டு, ‘மகாத்மாவை சுத்தமாக அகற்றி விடுங்களேன்...’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டேன். ஆனால், அதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அப்படியே நேரடியாக கருத்து எடுத்து கொண்டதன் விளைவால் சர்ச்சை ஆகி விட்டது என்றார்.
நிதிசவுத்ரி, 2012ம் ஆண்டு ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அதற்கு முன், ரிசர்வ் வங்கி அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். இவரது சகோதரரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இளைய சகோதரி ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.