உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்று முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை இந்தியா தொடங்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி நடக்க உள்ளது.
10 நாடுகள் பங்கேற்றுள்ள 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், இந்தியா முதல் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. சவுத்தாம்டனில் உள்ள ராஸ்பவுல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், புவனேஷ்வர், பும்ரா, பாண்ட்யா ஆகியோர் வேகத்தில் மிரட்டவுள்ளனர். குல்தீப்யாதவ், சஹால் இருவரும் சுழலில் மாயாஜாலம் காட்ட உள்ளனர். பேட்டிங்கிற்கு சாதகமான ராஸ்பவுல் மைதானத்தில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கோஹ்லி, தோனி என வலுவான பேட்ஸ்மேன் படையுடன் ஆல் ரவுண்டராக கேதார் ஜாதவும் களமிறங்குவதால், அபாரமாக ரன்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில்,இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோற்ற சோகத்தில் உள்ள டுபிளசிஸ் தலைமையிலான தெ.ஆப்பிரிக்க அணி கட்டாய வெற்றியைப் பெற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. ஆனால் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டைய்ன் மற்றும் நிகிடி ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காதது தெ.ஆப்பிரிக்க அணிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இதனால் இன்றைய போட்டி இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்து வெற்றியுடன் தனது புள்ளிக் கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.