மகன் ஜெயிச்சு 14 நாளாச்சு ... இப்பதான் ஓபிஎஸ்சுக்கு அம்மா சமாதி ஞாபகம் வந்துச்சோ?
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்த துணைை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அம்மா சமாதிக்கு செல்லும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குப் பின் இன்று ரொம்ப ரொம்ப லேட்டாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அதிமுகவில் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா அன்கோவால் ஓ.பன்னீர் செல்வத்தின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த ஓ.பி.எஸ்.நேராக ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். அதன் பின் தர்மயுத்தம் நடத்தப் போகிறேன் என்று சமாதியின் முன் பிரகடனம் செய்தார். அது முதல் முக்கிய நிகழ்வுகளின் போது அம்மா சமாதிக்கு செல்வதை வாடிக்கையாக்கி வந்தார். அதிமுகவின் பிற தலைவர்களும், அமைச்சர்களும் இதே போன்று ஆரம்பத்தில் அம்மா சமாதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா சமாதி இருப்பதையே அதிமுக தலைவர்கள் மறந்துவிட்டனர் என்றே கூறலாம். அந்த அளவுக்கு பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் பற்றும், பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்டு விட்டனர் அதிமுக தலைவர்கள். இதனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி டெல்லிக்கு படையெடுப்பதையே வாடிக்கையாக்கி விட்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றவுடன் மறுநிமிடமே வெற்றி பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கலைஞர் சமாதிக்குச் சென்று வெற்றியை சமர்ப்பித்தார் மு.க.ஸ்டாலின் .ஆனால் அதிமுகவினரோ, ஜெயலலிதா சமாதிப் பக்கம் ஒருத்தர் கூட தலைகாட்டவில்லை.
தோற்றவர்கள் தான் தலைகாட்டவில்லை என்றால், தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டும், பல்வேறு யுக்திகளைக் கையாண்டும் வெற்றி பெறச் செய்து விட்ட ஓ.பி.எஸ்.சும் ஜெயலலிதா சமாதிக்கு செல்வதை மறந்து விட்டார் போலும். அந்த அளவுக்கு, மகனுக்கு மந்திரி பதவிக்காக டெல்லிக்கு படையெடுப்பதிலேயே அக்கறை செலுத்தினார் ஓ.பி.எஸ். எம்.பி. ஆகி விட்ட அவருடைய மகன் ரவீந்திரநாத் குமாரும் மந்திரி கனவில் டெல்லியிலேயே முகாமிட்டு விட்டார்.
ஆனால் மந்திரி பதவிக்காக அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே நடந்த பனிப் போரால், இப்போது யாருக்குமே இல்லை என்றாகிவிட்டது. இதனால் வெறுங்கையுடன் டெல்லியிலிருந்து ஓபிஎஸ்சும், அவருடைய மகனும் திரும்பினர். இந்நிலையில், அதிமுகவில் ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று எம்.பி.யாக வெற்றி பெற்ற தனது மகனுடன், தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்கு பிறகு இன்று தான் ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் ஆஜரானார். தனது மகனின் வெற்றிக்கு ஓடி ஓடி உழைத்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மற்றும் தேனி பொறுப்பாளர்கள் சகிதம் ஓபிஎஸ் அம்மா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அம்மா சமாதிக்கு ஓபிஎஸ் வருவதற்கு இவ்வளவு நாள் தாமதம் ஏன்? இது தான் அம்மாவின் உண்மையான விசுவாசி எனக் கூறிக் கொள்ளும் ஓபிஎஸ் காட்டும் பயபக்தியா?என்றெல்லாம் அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் எதிர் குரூப்பினர் விமர்சித்து வருகின்றனர்.