விஷாலை எதிர்த்து ராதிகா டீம்? சூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் அணியே முன்னிலையில் உள்ளது. இந்த அணியை எதிர்க்க வலுவான ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டே நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணி முடிவடையாததால், ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். தற்போது, வரும் 23ம் தேதியன்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. அடையாறு, எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல் நாளன்று சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து படப்பிடிப்புகளையும் அன்று ஒரு நாள் ரத்து செய்ய வேண்டுமென்று கோரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கடந்த தேர்தலில், சரத்குமார்-ராதாரவி அணியை எதிர்த்து விஷால் அணி உருவானது. நாசர் தலைமையிலான இந்த அணிக்கு ஆதரவு பெருகியதுடன், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பக்கபலமாக இருந்தார். பெரும் கலாட்டா வெடிக்கும் என்று எதிர்பார்த்த தேர்தலில் பெரிய பிரச்னைகள் ஏற்படவில்லை. தலைவராக நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். விஷால் அணியினரே பெரும்பாலும் வென்றனர்.

இந்த தேர்தலிலும் அந்த அணி மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது. கடந்த முறை வேகமாக இருந்த ராதாரவி, சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா பற்றி அசிங்கமாக பேசி கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதனால், தி.மு.க. கட்சியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. அதே போல், முன்னாள் தலைவர் சரத்குமார் இந்த முறை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், ராதிகா தலைமையில் ஒரு தனி அணியை உருவாக்க விஷாலின் எதிர்ப்பாளர்கள் ரகசியமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

இன்னொரு புறம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணியை உருவாக்க ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட சிலர் முயன்று வருகிறார்கள்.

மேலும், நடிகர் விஷாலுக்கு ஏற்கனவே டி.ராஜேந்தர், சிம்பு, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பாக உள்ளனர். அவர்கள் எந்த அணிக்கு ஆதரவாக செல்வார்கள் என தெரியவில்லை.

வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 10ம் தேதி வரை மனுக்கள் தாக்கல் செய்யலாம். எனவே, இன்னும் ஓரிரு நாளில் விஷால் அணிக்கு போட்டி இருக்குமா என்பது தெரியவரும்.

More News >>