மத்திய அரசின் வலையில் எடப்பாடி சிக்குகிறாரா?

மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கான வரைவு கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மும்மொழி பாடத்திட்டம் கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு 3வது பாடமாக இந்தியை கட்டாயம் ஆக்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா உள்பட மற்ற சில மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்தி கட்டாயம் என்பதை திருத்தி, புதிய வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனாலும், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளும், இயக்கங்களும் இன்னும் மத்திய அரசைக் கண்டித்து வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழிப் பாடமாக கற்பிக்க பிரதமர் நரேந்திர மோடிஜியிடம் கோரிக்கை விடுக்கிறேன். இதன் மூலம், மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு சிறந்த சேவை செய்ததாக இருக்கும்’’என்று கூறியுள்ளார்.

இதிலும், தி.மு.க. உள்ளிட்ட சில கட்சியினர் சந்தேகம் கிளப்பினர். ‘‘மத்திய அரசின் வலையில் முதலமைச்சர் தானாக போய் விழுகிறார். மற்ற மாநிலங்களில் 3வது விருப்பப் பாடமாக தமிழை ஆக்கக் கோரினால், தமிழகத்தில் 3வது விருப்பப் பாடமாகக் கொண்டு வர அனுமதிப்பது போலாகி விடும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

More News >>