அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட குழப்பம் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீண்டும் மோதல்?
பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கடந்த முறை 37 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. இந்த முறை ஒரே தொகுதியில் வென்றது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சட்டமன்றத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறது. இந்த படுதோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததே முக்கிய காரணம் என்று அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதை வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, அ.தி.மு.க. ஆட்சி மீதுள்ள வெறுப்பினால்தான் பா.ஜ.க.வுக்கும் தோல்வி ஏற்பட்டது என்று அந்த கட்சி சொல்லுகிறது. எனவே, பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகி விடலாமா என்ற பேச்சு அ.தி.மு.க.வுக்குள் எழுந்துள்ளது. அதே சமயம், துணிச்சலாக எந்த முடிவும் எடுக்க முடியாத அ.தி.மு.க., தற்போது புலி வாலை பிடித்த கதையாக திணறி வருகிறது.
கடந்த ஜூன் 3ம் தேதியன்று அ.தி.மு.க. சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக, ஜெயலலிதா இருந்த போதே இப்படி பிரம்மாண்டமாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இம்முறை முதலமைச்சர் எடப்பாடி பழனி்ச்சாமி தலைமையில் இந்நிகழ்்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்று காலையில் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் கடைசி நேரத்தில் இப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
மாலை 6 மணி வரை அவருக்காக காத்திருந்து விட்டு, அதன்பிறகு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், கூட்டணி தலைவர்கள் ராமதாஸ், பிரேமலதா, வாசன், சரத்குமார் என்று பலரும் வந்திருந்தனர். ஆனால், பா.ஜ.க.வினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் வராததற்கு காரணம் அவருக்கு பல்வலி ஏற்பட்டதுதான் என்று சொல்லப்பட்டது. அந்நிகழ்ச்சியில், ‘சிலர் ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார்கள், அது நடக்காது’ என்று ஓ.பி.எஸ்.பேசினார்.
அவர் தி.மு.க.வைத்தான் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது என்று சொன்னதாக விளக்கம் தரப்பட்டது. தி.மு.க.வை சொல்வதென்றால் நேரடியாக திட்டி விட்டு போகலாமே! பா.ஜ.க. பங்கேற்காத இப்தார் நிகழ்ச்சியில் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்தும் விதமாக, பா.ஜ.க.வைத்தான் அவர் பேசியிருக்கலாம் அல்லவா? என்று சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர்.
அதற்கேற்றாற் போல், அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை. அதற்கு அடுத்த நாள், காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் முதலமைச்சர் வரவில்லை. பல்வலிக்காக மருத்துவர் எஸ்.எம்.பாலாஜியிடம் சிகிச்சை பெற்று, ஓய்வில் இருக்கிறார் முதலமைச்சர் என்று அரசுதரப்பில் சொல்லப்்பட்டது.
ஆனால், இப்தார், காயிதே மில்லத்துக்கு மரியாதை போன்ற நிகழ்ச்சிகளை முதலமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அவர், பிற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்து ஒரு ட்விட் போட்டார். அது இன்னும் சர்ச்சையை கிளப்பி விட்டது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எடப்பாடி ஆதரிக்கிறாரா என்று கேட்டு, தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆக, பா.ஜ.க.வுக்கு ஆதரவான கொள்கையைத்தான் தொடர வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால், ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலர் அந்த கொள்கையை கடுமையாக எதிர்க்க நினைக்கிறார்கள் என்றொரு பேச்சு ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்கள் சிலர் அதை மறுக்கின்றனர். ‘‘ஓ.பி.எஸ்.தான் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அவர் அமித்ஷாவிடம் வற்புறுத்தி தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்குவதற்கு இப்போதும் காய் நகர்த்தி வருகிறார்’’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.
மேலும், ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், ஜூன் 5ம் தேதியன்று ஆடிட்டர் குருமூர்த்தியை ரகசியமாக சந்தித்து சில விஷயங்கள் பேசியுள்ளதாகவும் தகவல் வருகிறது. எது எப்படியோ, டெல்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்று வந்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கி செல்கின்றனர். அவர்்களுக்கு இடையே பனிப்போர் மீண்டும் மோதலாக வெடிக்கத் தொடங்கியுள்ளது என்று அ.தி.மு.க வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், 2ம் கட்டத் தலைவர்களும் என்ன பேசுவது, யாரை ஆதரிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.