தூங்கா மாநிலமாகும் தமிழ்நாடு விடிய, விடிய கடை திறக்க அனுமதி
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள், கடைகள், மால்கள் போன்றவை வருடம் முழுவதும் இடைவிடாது 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு, ‘கடைகள் மற்றும் நிறுவனங்கள்(பணியாளர் வரண்முறை மற்றும் சேவை நிலை) சட்டம் என்ற மாதிரிச் சட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்பின், இந்த சட்டத்தை மாநில அரசுகள் தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப திருத்தி வடிவமைத்து செயல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பரிந்துரை செய்தது.
தற்போது இதை ஏற்று, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் போன்றவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அதே சமயம், ஊழியர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அது குறித்து காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக கருதப்படும். அதற்கு அதிகமான நேரம் பணியாற்றினால், அதை ஓவர்டைமாக கருதி ஊதியம் அளிக்க வேண்டும். பெண் ஊழியர்களை இரவு 8 மணி வரை பணியமர்த்தலாம். அதற்கு மேல் இரவு பணி கொடுத்தால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வாகன வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது.