டி.ஆர்.எஸ். கட்சிக்கு தாவும் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
நாட்டை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரசின் நிலை தற்போது மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 44 எம்.பி.க்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போன காங்கிரஸ், இந்த முறையும் வெறும் 53 எம்.பி.க்களைத்தான் பெற்றிருக்கிறது. நேரு குடும்பத்தினரே பரம்பரையாக ஆட்சி செய்ய இது என்ன முடியரசு நாடா என்று பா.ஜ.க. மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பி வந்தது. இதனால்தான், மக்கள் காங்கிரசை ஒதுக்குகிறார்களோ என்ற முடிவுக்கு வந்து, ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறினார். ஆனாலும், இது வரை அவரது விலகலை கட்சி ஏற்கவும் இல்லை, மாற்று ஏற்பாடும் செய்யவில்லை.
அகில இந்திய தலைமையே இந்த குழப்பத்தில் இருப்பதால், மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டு வருகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவராக இருந்த உத்தம்குமார் ரெட்டி, நல்கோண்டா தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றதும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மீதமுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் கட்சித் தாவ முடிவு செய்தனர். அவர்கள் ஏற்கனவே மார்ச் மாதமே கட்சித் தாவப் போவதாக கூறியிருந்தனர், ஆனாலும், கட்சித் தலைமை, அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை.
இந்த சூழலில், கண்ட்ரா வெங்கட்ட ரமணா ரெட்டி தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் சீனிவாச ரெட்டியை சந்தித்து ஒரு கடிதம் அளித்தனர். அவர்கள் தனி அணியாக செயல்படுவதாகவும், தற்போது ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் சேரவிருப்பதாகவும் கூறி கடிதம் அளித்தனர். இதை சபாநாயகர் பரிசீலிப்பதாக கூறினார்.
இந்த 12 பேர் போய் விட்டால், காங்கிரசில் மீதி 6 எம்.எல்.ஏ.க்கள்தான் இருப்பார்கள். இதனால், காங்கிரஸ் இந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. தற்போது ஐதராபாத் எம்.பி.யாக உள்ள அசாதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியி்ன் பலம் தற்போது 100 ஆகி விடும்.