பாஜகவின் திடீர் எழுச்சியால் அதிர்ச்சி... பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்கும் மம்தா

மே.வங்கத்தில் பாஜகவின் திடீர் விஸ்வ ரூபத்திற்கு தடை போட, தேர்தல் வியூகம் வகுப்பதில் நிபுணரான பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளார் மம்தா பானர்ஜி.

இந்தியாவில் தேர்தல் வியூகம் வகுப்பதில் சமீப காலமாக பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2012-ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போதும் 2014-ல் மக்களவைத் தேர்தலிலும் பாஜக பெற்ற பிரமாண்ட வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்.சமூக ஊடகங்கள் மூலமும், வித்தியாசமான விளம்பரங்கள் மூலமும் மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு ஏற்படச் செய்து பாஜகவுக்கு பெரும் வெற்றியை தேடித் தர காரணமாக இருந்தவர்.

இதனால் பிரசாந்த் கிஷோரின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. இதனால் பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரசாந்த் கிஷோரின் தயவை நாடியது. அங்கும் இவர் வகுத்துக் கொடுத்த வியூகம் செல்லுபடியானது. பீகாரில் மீண்டும் அபார வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் நிதீஷ் குமார் அமரக் காரணமானார் பிரசாந்த் கிஷோர் .

இந்நிலையில் தான் உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு இழந்து தள்ளாட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரசாந்த் கிஷோரின் துணையை நாடியது. இதனால் 2017-ல் உ.பி.யில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்தார். ஆனால், உ.பி.யில் அவருடைய பாச்சா பலிக்காமல் போக, காங்கிரஸ் படுதோல்வியையே சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் உ.பி.யில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை காங்கிரஸ் கடைப் பிடிக்காததும் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறலாம். பிரியங்காவை 2017லிலேயே அரசியலில் குதிக்குமாறு பிரசாந்த் கூற, காங்கிரஸ் ஏற்கவில்லை என்பதும் தோல்விக்கு ஒரு காரணமாகி விட்டது.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாடினார். அதனை ஏற்றுக்கொண்டு பிரசாந்த் கிஷோர் களமிறங்கி அதிரடி வியூகங்களை வகுத்துக் கொடுக்க ஜெகன் மோகன் அபார வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 தொகுதிளில் 151 இடங்களிலும், மக்களவையில் 25-ல் 22 இடங்களையும் ஜெகனின் கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தது. இதனால் பிரசாந்த் கிஷோரின் மவுசு மீண்டும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் மே. வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு உதவ வருமாறு பிரசாந்த் கிஷோருக்கு தற்போது அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், மே.வங்கத்தில் பாஜக திடீர் எழுச்சி பெற்று மம்தாவை ஆட்டம் காண வைத்து விட்டது. பாஜக வகுத்த வியூகங்கள் மற்றும் அக்கட்சியினர் கொடுத்த தொல்லைகளால் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார் மம்தா. இதனால் 2021-ல் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரச்சார உத்திகளை மாற்ற முடிவு செய்துள்ள மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்துள்ளார்.பிரசாந்தின் யுக்திகள் பாஜகவின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, மம்தாவுக்கு கைகொடுக்குமா? என்பது 2021-ல் தெரிந்துவிடும்.

More News >>