இஸ்ரேலிடம் இருந்து ரூ.300 கோடிக்கு வெடிகுண்டுகள் வாங்க இந்தியா முடிவு
இஸ்ரேல் நாட்டிலிருந்து ரூ.300 கோடிக்கு ஸ்பைஸ்-2000 ரக வெடிகுண்டுகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்திருக்கிறது.
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் 40 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து, இந்திய விமானப் படையினர், திடீரென பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்களை கண்டுபிடித்து, பயங்கர வெடிகுண்டுகளை வீசியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், அதே போன்ற பயங்கர வெடிகுண்டுகளை அவசரமாக வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ரபேல் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்பைஸ்-2000 ரக வெடிகுண்டுகளை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.300 கோடிக்கு நூறு வெடிகுண்டுகள் வாங்கப்பட உள்ளது.
இந்த வெடிகுண்டு ஒவ்வொன்றும் 900 கிலோ ஸ்டீல் கேஸ்டிங்கில் 80 கிலோ வெடிமருந்துகளை கொண்டிருக்கும். இது கட்டிடத்தின் மேற்பகுதியை உடைத்து கீழே விழும் போது அதிகமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்த குண்டுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.