ட்ரீட்மெண்ட் சரியில்லையாம் டாக்டர் மனைவி்யை கொன்ற நோயாளி!
உடல் அரிப்புக்கு டாக்டர் அளித்த சிகிச்சை சரியில்லை என்று கூறி, அவரது மனைவியைக் கொன்ற கொடூர நோயாளி கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது இந்த சம்பவம். அங்குள்ள மால்வா மில்ஸ் பகுதியில் டாக்டர் ராமகிருஷ்ண வர்மா என்ற தோல் சிகிச்சை நிபுணர் வீடு உள்ளது. வீட்டிலேயே கிளினிக்கும் நடத்தி வந்தார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரபீக் ரஷீத்(45) என்பவர், தனக்கு உடல் முழுக்க அரிப்பு இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்றார்.
ரபீக் கடந்த 2 நாள்களுக்கு முன்பு காலை 11 மணியளவில் டாக்டர் வர்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது டாக்டரின் மனைவி லதா, அவசர வேலையாக டாக்டர் டெல்லிக்கு போயிருப்பதாக கூறினார். அவரிடம் ரபீக் திடீரென வாக்குவாதம் செய்தார். ‘ஆறு மாதமாக டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன், நோய் குணமாகவில்லை. பணம் மட்டும் வாங்கிக்கிறார்’ என்று சண்டை போட்டிருக்கிறார். அதற்கு லதா கோபமாக பதிலளித்திருக்கிறார்.
இதில் ஆத்திரமடைந்த ரபீக் தன்னிடம் இருந்த கத்தியால் லதாவை பல முறை குத்தினார் அவரது அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகன் அபிஷேக்(19) ஓடி வந்து அம்மாவை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரையும் ரபீக் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். அதற்குள் லதா, அபிஷேக் கூக்குரல் கேட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ரபீக்கை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரபீக்கை கைது செய்து அழைத்து சென்ற போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட லதா மரணமடைந்தார். அபிஷேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து துங்கோகஞ்ச் பகுதி போலீஸ் அதிகாரி பரிக்கர் கூறுகையில், ‘‘நோயாளி ரபீக் ஏற்கனவே 2015ல் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு போய் ஜாமீனில் வெளி வந்தவர். டாக்டர், வீட்டில் இல்லை என்பது தெரிந்ததும் அவரது மனைவி லதாவை பலாத்காரம் செய்ய ரபீக் முயற்சித்திருக்கலாம் என்றொரு சந்தேகம் எழுகிறது. இருந்தாலும் முழுமையான விசாரணைக்குப் பின்பே அது குறித்து உறுதியாக சொல்ல முடியும்’’ என்றார்.