துபாயில் தடுப்பில் பஸ் மோதி 8 இந்தியர் உள்பட 17 பேர் பலி
துபாயில் சாலையில் எச்சரிக்கை போர்டில் பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர்.
துபாயில் இருந்து நேற்று மாலை மஸ்கட்டுக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது, ஒரு தடத்தில் இருந்து அடுத்த தடத்திற்கு மாறிச் சென்றிருக்கிறது. ஆனால், அந்த தடத்தில் மிகப் பெரிய சாலை எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த சாலையில் ஆம்னி பஸ் போன்ற உயரமான வாகனங்கள் செல்ல முடியாது என்பதை சுட்டிக்காட்டியும் முன் கூட்டியே எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், பஸ்சை ஓட்டிய டிரைவர் வெயில் தன்மீது படாமல் இருப்பதற்காக பஸ்சுக்கு உட்புறம் கண்ணாடிக்கு மேல் சிறிய துணியை கட்டியிருக்கிறார். அதனால், அவர் எந்த எச்சரிக்கை போர்டையும் படிக்காமல் தடம் மாறிச் சென்றிருக்கிறார். அல் ரஷீ்தியா அருகே பஸ் செல்லும் போது மிகப்பெரிய போர்டு இருந்துள்ளது, அது பஸ்சில் இடிக்கும் என்பதை உணர்ந்த டிரைவர் அவசரமாக வலதுபுறமாக திருப்ப முயன்றார். ஆனாலும், அந்த போர்டு பஸ்சின் இடதுபக்க மேற்கூரையை கிழித்து போட்டது. இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் பலியாகியுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவரின் கவனக் குறைவு குறித்து தகவல் கிடைத்தது. காயமடைந்த டிரைவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பலியான 17 பேரில் 8 பேர் இந்தியர்கள். அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ்கான் பதான், தீபக்குமார், ஜமாலுதீன், அரக்கவிட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாக்குர் ஆகியோரே பலியானவர்கள். அவர்களின் குடும்பத்தினருடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.