அட இதிலுமா இடஒதுக்கீடு... ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்... ஜெகன்மோகன் புதிய புரட்சி
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், இட ஒதுக்கீடு போல 5 பேருக்கு துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி புதிய புரட்சியை படைத்துள்ளார்.
ஆந்திராவில் காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2010-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய 9 வருடத்தில், தற்போது நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கடந்த 30-ந் தேதி முதல்வராகவும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். மக்களவைத் தேர்தலிலும் 25 தொகுதிகளில் 23-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் விஜயவாடா அருகே தா டப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி இன்று நடத்தினார். அப்போது தமது அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களுடன் விவாதித்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, தமது அமைச்சரவையில் 25 பேர் இடம் பெறுவார்கள் என்றும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அமைச்சரவையில் 5 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாகவும் புரட்சிகரமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
அதாவது இட ஒதுக்கீடு போல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை பிரிவு மற்றும் ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள காப்பு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் துணை முதல்வராக்கப்பட உள்ளனர் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் கடந்த முறை ஆட்சி புரிந்த சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என 2 பேர் துணை முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு மாநிலத்தில் 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்கும் அதிசயம் நாட்டிலேயே முதன் முறையாக ஆந்திராவில் அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.