சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்... முதல்வர் எடப்பாடி பிடிவாதம்
சேலம் - சென்னை அதிவிரைவு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் சமாதானம் பேசி, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்றப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே புதிதாக 8 வழிச்சாலைத் திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது மத்திய அரசு .இத்திட்டத்திற்காக ஏராளமான விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு விறுவிறுப்பு காட்டியது. இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதிமுக, பாஜக தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த வழக்கில், இத்திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பும் வழங்கியது. மேலும் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களை திருப்பி ஒப்படைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் மத்திய அரசும், மாநில அரசும் பிடிவாதம் காட்டி வருகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர், சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் சேலத்தில் இன்று நடந்த ஈரடுக்கு பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.விழாவில் அவர் பேசுகையில், பொதுமக்களின் உயிரைக் காக்கவே சாலைத் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம். இந்தத் திட்டம் தனிநபரின் வசதிக்காக அல்ல. உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது . நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தில் தொழில் வளர்ச்சி மேம்படும். விபத்து ஏற்படாமல் இருக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம். பாதிக்கப்படும் விவசாயிகளிடம் சமாதானம் பேசி, அவர்கள் சம்மதத்துடன் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என பேசினார்.
இந்த 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பினாலும், திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசும், மாநில அரசும் உறுதியாக உள்ளன.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய சேலம் பேச்சு மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.