வயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி - 3 நாள் பயணத்தை தொடங்கினார்

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத் தொகுதியான உ.பி.யின் அமேதியில் போட்டியிட்டதுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதியில் இந்த முறை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றுவிட்டார். ஆனாலும் வயநாடு தொகுதி ராகுல் காந்தியை கைவிடவில்லை. வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19-ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இதனால் தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று முதல் 3 நாள் பயணமாக ராகுல் காந்தி கேரளா சென்றுள்ளார். . வயநாடு தொகுதிக்கு உட்பட்ட திருநெல்லி பகுதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அங்கு திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளிலும் ராகுல்காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வயநாட்டில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி, தொகுதி முழுவதும் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன், தொகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிய உள்ளார்.

திருநெல்லியில் கொட்டும் மழையிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், தம் மீது பெரும் நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் தனது முதல் பணி என்றார்.மேலும் மக்களவையிலும் வயநாடு தொகுதி பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

More News >>