இதோடு நிறுத்துங்கள்... பதிலடி கொடுத்தால் தாங்க முடியாது... துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
அதிமுகவினர் பதிலடியாக விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.தேனி தொகுதியில் மட்டுமே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் . இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றபோது, ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் அதிமுகவுக்குள் எழுந்த பூசலால், யாருக்குமே அந்தப் பதவி கிடைக்காமல் போய்விட்டது.
இது குறித்து, துக்ளக் இதழில் வெளியான ஒரு கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, வெளியே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்' என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல துக்ளக் குறிப்பிட்டிருருந்தது.
துக்ளக் பத்திரிகையின் இந்த கார்ட்டூனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக கட்சியின் நாளேடான நமது அம்மா நாளிதழில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ‘தரங்கெட்ட பத்திரிகையும்..தரம் தாழ்ந்த விமர்சனமும்.. என்ற தலைப்பின் கீழ் துக்ளக் பத்திரிக்கையை கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. துக்ளக் பத்திரிகையில் அதிமுகவையும், தமிழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறது. சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக-வை விமர்சனம் செய்வதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பதிலுக்கு நாங்களும் விமர்சித்தால் குருமூர்த்தி தாங்க மாட்டார் என்று எச்சரிக்கிறேன் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பகிரங்க எச்சரிக்கையால், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவில் மேலும் உரசல் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.