எப்படி வந்தது ரூ.27 ஆயிரம் கோடி? பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கேள்வி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விவரங்களை அந்த கட்சி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் என்ற தேர்தல் கண்காணிப்பு தொண்டு நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் செலவிட்ட தொகை சுமார் ரூ.27 ஆயிரம் கோடி ரூபாய். இது, அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த செலவுத் தொகையான ரூ.60 ஆயிரம் கோடியில் 45 சதவீதம் என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்த தொகை மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை விட 30 சதவீதம் அதிகமானது. சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை விட 45 சதவதம் அதிகம் என்றும் கூறியுள்ளது.

இது குறி்த்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பணம், பணம், பணம் மட்டும்தான். அதைத்தான் அந்த கட்சி நம்பியிருக்கிறது. ஜனநாயகத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரியாக செலவிட்டு தேர்தலை சந்தித்தால்தான் அது முறையான தேர்தலாக அமையும். ஒரு கட்சியே இவ்வளவு பணம் செலவழித்துள்ளது என்றாலே தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை யூகிக்கலாம். மேலும், இந்த ரூ.27 ஆயிரம் கோடி எப்படி அந்த கட்சிக்கு கிடைத்தது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். அதே போல், தேர்தலில் மொத்தம் எவ்வளவு செலவிடப்பட்டது, கட்சிகள் எவ்வளவு செலவிட்டன என்்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.

More News >>