பிரச்னைகளை பேசித் தீர்ப்போம்... பிரதமர் மோடிக்கு பாக்.பிரதர் இம்ரான்கான் கடிதம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பின் அந்நாட்டின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை பேசித் தீர்ப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்மாத இறுதியில் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசப் போவது இல்லை என்று இந்தியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடிக்கு நேற்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார்.காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

More News >>