நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல்? விஷாலை எதிர்க்கும் பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் இன்று(ஜூ்ன்8) வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலும் திடீரென அரசியல் புகுந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். கடைசியாக, ராதாரவி-சரத்குமார் அணியை எதிர்த்து, விஷாலின் பாண்டவர் அணி போட்டியிட்டு வென்றது. அந்த தேர்தலில் கடைசி வரை வன்முறை வெடிக்கலாம் என்ற பதற்றம் காணப்பட்டது. கடைசியில், நாசர் தலைமையில் விஷால் அணி பெரும் வெற்றி பெற்று நிர்வாகத்தில் பொறுப்பேற்றது.

இந்த அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்து விட்ட போதிலும் நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணி முடிவடையாத காரணத்தால் தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது முன்னாள் நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். 2019-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23ம் தேதியன்று நடைபெறுகிறது.

சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. வரும் 10ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள். 14ம் தேதி, மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள். அன்று மாலை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த முறை விஷால் அணியுடன் கடுமையாக மோதிய சரத்குமார்-ராதாரவி அணி இம்முறை ஒதுங்கிக் கொண்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ராதாரவி, நடிகை நயன்தாராவைப் பற்றி அவதூறாக பேசி பெரிய சர்ச்சையானது. அதனால், அவர் தி.மு.க.வில் இருந்தே வெளியேற நேர்ந்தது. நடிகர், நடிகைகள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு சரிந்தது. அதே போல், நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கவனம் செலுத்திய சரத்குமாரும் ஒதுங்கினார். எனினும், விஷால் அணியை எதிர்க்க ராதிகா தலைமையில் ஒரு அணியை உருவாக்க முயற்சிகள் நடந்தன. அது நடக்காமல் போனது.

இந்நிலையில், விஷாலை எதிர்த்து வேல்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளரும், கல்லூரி அதிபருமான ஐசரி கணேஷ் போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். ஆயினும் அவர் பெரிய போட்டியாக இருக்க மாட்டார் என்றும், விஷால் அணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து வலுவான அணியாக ஐசரி கணேஷ் அணி உருவாகியுள்ளது. தலைவர் பதவிக்கு நடிகர் நாசரை எதிர்த்து பாக்யராஜ் களமிறங்குகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்்த்து ஐசரி கணேஷ் இறங்குகிறார். மேலும், விஷால் அணியில் இருந்த குட்டி பத்மினி உள்பட சிலர் பாக்யராஜ் அணிக்கு தாவியுள்ளனர். விஷால் அணியில் கடந்த முறை போட்டியிட்ட பொன்வண்ணன் இம்முறை போட்டியிடப் போவதில்லை என கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, தேர்தலில் இந்த முறையும் அரசியல் புகுந்து விட்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசியில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அப்போது நடந்த பல சம்பவங்களுக்கும் ஆளும் அ.தி.மு.க.வே காரணம் என்று விஷால் குற்றம்சாட்டி, அக்கட்சியை கடுமையாக எதிர்த்தார்.

இதற்குப் பிறகு, நடிகர் சங்கத்தில் விஷால் அணியே பொறுப்பேற்றதால், ஆளும்கட்சியிடம் இணக்கமாக சென்று சலுகைகளை பெற முடியவில்லை என்று சங்கத்தினர் சிலர் பேசத் தொடங்கினர். அதே போல், விஷால் பாரபட்சமாக செயல்படுவதாகவும், தனக்கு சாதகமாக சங்கத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால், அதை விஷால் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலினை விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது ஆளும் அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விஷால் அணியை பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக பாக்யராஜ் அணியை ஆளும்கட்சியே பின்புலத்தில் இருந்து களம் இறக்கியுள்ளது என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

பாக்யராஜ் ஏற்கனவே எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்த போது, அவருக்கும் விசுவுக்கும் மோதல் ஏற்பட்டது. அதே போல், சர்க்கார் படக்கதை விவகாரத்்தில் விஜய்க்கும் அவருக்கும் மனக்கசப்பு வந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், பாக்யராஜ் அணிக்கு யாரெல்லாம் ஆதரவு தருவார்கள், விஷால் அணியை அந்த அணிக்கு கடும் போட்டியைத் தருமா என்பது வரும் 14ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியானது தெரியும்.

More News >>