குருவாயூரில் பிரதமர் மோடி தரிசனம் - எடைக்கு எடையாக தாமரை மலர்களை வைத்து வழிபாடு

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் கான்க்கையாக வழங்கி வழிபாடும் நடத்தினார் பிரதமர் மோடி.

இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதற்குப் பின் முதன் முறையாக தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று பிற்பகல் மாலத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, நேற்று இரவு டில்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி கடற்படை விமான தளத்துக்கு வந்தார்.

இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்றார். அங்கு கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்த பின், எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கையாக செலுத்தினார். கேரளாவின் பாரம்பர்யமான வெள்ளை வேஷ்டி, தோளில் துண்டு அணிந்தபடி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அப்போது பாதுகாப்பு காரணமாக, கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரதமருடன் கேரள ஆளுநர் சதாசிவம் உடன் சென்றார்.

பிரதமராக மீண்டும் தேர்வு செய்ப்பட்ட மோடி முதன் முதலாக காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார். பிரதமர் பதவியேற்ற பின் முதன் முறையாக குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த மோடி, இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று வழிபடுகிறார். பின்னர் அவர் மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார். நாளை இலங்கைக்கும் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

More News >>