ஆந்திராவில் 5 துணைமுதல்வர் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு

ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். வரும் 14ம் தேதி, அம்மாநில சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதல்வராக கடந்த 30ம் தேதியன்று பதவியேற்றார். மாநில ஆளுநர் இ.எல்.நரசிம்மன், முதல்வர் ஜெகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று காலை 11.57 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, விஜயவாடாவுக்கு வந்திருந்த ஆளுநர் நரசிம்மனை சந்தித்து 25 பேர் அடங்கிய அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ஜெகன் அளித்தார். அதில் 5 பேர் துணை முதல்வர்கள்.

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தற்காலிக சபாநாயகராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சம்பங்கி, சின்ன வெங்கட அப்பாலா நாயுடு நியமிக்கப்பட்டார்.

மேலும், புதிய சபாநாயகர் பதவிக்கு தம்மிநேனி சீதாராம், துணை சபாநாயகர் பதவிக்கு ரகுபதி ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

முதல்வர் ஜெகன் முன்னிலையில் 5 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தர்மனா கிருஷ்ணா தாஸ் காரு, போத்சா சத்யநாராயணா, புஷ்பா சிவானி, முட்டம்சேத்தி சீனிவாச ராவ், குர்சலா கன்னபாபு, சுபாஷ் சந்திர போஸ், ரங்கநாத ராவ், அல்லகாளி கிருஷ்ணா சீனிவாஸ் என்று வரிசையாக 25 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சரவையில் 7 பேர் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், 4 பேர் ரெட்டி, 5 பேர் தலித் மற்றும் முஸ்லிம், வைசியர், சத்திரியர் என்று ஒவ்ெவாரு இனத்தவருக்கும் தலா ஒரு பதவி என்று வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர்கள் யார், யார் என்பதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை ரோஜா. சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் 2வது முறை எம்.எல்.ஏ.வாகியுள்ள அவருக்கு மின்வாரியத் துறை அமைச்சர் பதவி தரப்படும் என்று மீடியாக்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. வேறொரு பதவி தரப்படலாம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஆந்திராவில் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 2 துணை முதல்வர்கள் இருந்தனர். ஆனால், 5 துணை முதல்வர்கள் இருப்பது நாட்டிலேேய இப்போதுதான் முதல் முறையாகும்.

ஆந்திர சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது. அன்று புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் அப்பாலா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மறுநாள், புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து வரும் 14ம் தேதியன்று சட்டசபையில் ஆளுநர் நரசிம்மன் உரையாற்றுவார்.

சட்டசபையில் ஆளும்கட்சிக்கு 151 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசத்திற்கு 23 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

More News >>