உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸி.,யை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.
இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில்,இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது போல ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை இந்திய அணி பெறுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் இன்றைய போட்டி சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த தொடரில் தான் ஆடிய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கனை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இந்தியதீவுகளை 15 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றுள்ள ஆஸி.அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய, இந்தியாவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில், ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இரு அணிகளும் மோதிய 11 ஆட்டங்களில் ஆஸி.அணி 8 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று, நடைபெற உள்ள போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என வானிலை நிலவரமும் அச்சுறுத்துகிறது.கடந்த ஒரு வாரமாகவே லண்டனில் மழையின் குறுக்கீடு இருந்து வருவதால் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.