மாலத்தீவு டூ இலங்கை டூ திருப்பதி: பிரதமர் மோடியின் இன்றைய பயணத் திட்டம்

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

பிரதமராக மீண்டும் பதவியேற்ற மோடி, இந்த முறை தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவை தேர்வு செய்தார்.கடந்த முறை பிரதமராக இருந்த 5 ஆண்டுகளில் உலகின் பல நாடுகளை சுற்றிய பிரதமர் மோடி, மாலத்தீவுக்கு மட்டும் சென்றதில்லை. இதனால் இந்த முறை முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவை தேர்வு செய்தார். இதற்காக நேற்று கேரளா வந்த பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து, பின்னர் மாலத்தீவு சென்றடைந்தார்.

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்ததுடன், அந்நாட்டின் உயரிய விருதான நிஷான் இஷுதின் விருதை வழங்கி மாலத்தீவு அதிபர் முகம்மது சோஹுல் கவுரவித்தார். பின்னர் மாலத்தீவு நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றியதுடன், இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெடுத்திட்டார்.

மாலத்தீவு பயணம் முடிந்து இன்று நண்பகல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி. இலங்கை தலைநகர் கொழும்பில், சமீபத்தில், ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் இலங்கை அதிபர் சிறீசேனாவுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.இலங்கை பயணத்தை முடித்துவிட்டு இன்று மாலையே நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>