மாயமான விமானம் பற்றிய தகவலுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிப்பு
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார்.
கடந்த 3ம் தேதியன்று, அசாமில் உள்ள ஜோர்காட் தளத்தில் இருந்து, இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்திற்கு பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானக் குழுவினர் 8 பேரும், பயணிகள் 5 பேரும் விமானத்தில் சென்றனர். இந்த விமானம் பகல் 1 மணிக்கு பிறகு, ரேடார் வளையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு, விமானப் படையின் கட்டுப்பாட்டு அறை முயற்சித்தும் விமானத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவே இல்லை. விமானம் எப்படி மாயமானது? அதிலிருந்த 13 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
இதையடுத்து, விமானத்தை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்றது. தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதனால், அருணாசலப் பிரதேசத்தில் வானிலை மோசமாக உள்ளது. ஆயினும் விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த பணியில் இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. மாயமான விமானம் ஏஎன்32 என்ற ரகத்தைச் சேர்ந்தது. இந்த ரகம் ரஷ்யத் தயாரிப்பு விமானமாகும். இந்த ரக விமானங்கள் கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று விமானப் படை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆனால், நிலப்பரப்பை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மூலமாக அருணாச்சலில் சுமார் 500 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணித்து பார்த்ததில் எந்த தடயமும் சிக்கவி்ல்லை.
மேலும், பருவ மழைக் காலம் தொடங்கி விட்டால் அடர்ந்த காட்டுக்குள் மக்கள் செல்வதில்லை. எனவே, கிராம மக்கள் அந்த விமானப் பாகங்கள் எங்காவது கிடக்கிறதா என்பதை பார்க்க காட்டுக்குள் செல்வதை ஊக்குவிப்பதற்காக ரூ.5 லட்சம் சன்மானம் தருவதாக விமானப்படை அறிவித்துள்ளது.
இது குறித்து கிழக்குப் பிராந்திய ஏர்மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் கூறுகையி்ல், ‘‘மாயமான விமானம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது’’ என்றார். ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டக் கலெக்டர், விமானம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
கடந்த 2016ம் ஆண்டில் சென்னை விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற இதே ஏ.என்.32 ரக விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை நீண்ட காலமாக விமானப்படை தேடி வந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வங்கக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடலில் நீண்டநாட்களாக தேடப்பட்டது. கடைசியில் விமானத்தில் இருந்த 29 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.