பா.ஜ.க. கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான், அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வென்றார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் தோற்றனர். மக்களிடம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான மனநிலை காணப்பட்டதால், அந்த கூட்டணி தோல்வியடைந்தது என்று பரவலாக பேசப்பட்டது.
தற்போது இந்த கருத்தை அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களும் பேசத் தொடங்கி விட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:இந்த தேர்தலில் தி.மு.க.
வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து மக்கள் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று பார்த்துதான் வாக்களித்துள்ளனர். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால்தான் தோல்வி ஏற்பட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால், அ.தி.மு.க.வுக்கு வர வேண்டிய சிறுபான்மை மக்களின் வாக்குகள் வராமல் போய் விட்டது. எனவே, அ.தி.மு.க. தோல்விக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.
தற்போது, பா.ஜ.க.வினரும் இதே போல், தோல்விக்கு அ.தி.மு.க.வை குறை கூறத் தொடங்கியுள்ளனர். ‘‘அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை கண்டுகொள்ளாமல் நாம் ஆதரித்தது போல் மக்களிடம் எண்ணம் வந்து விட்டது. அதனால்தான், தோல்வியுற்றோம் என்று பா.ஜ.க.வினர் கட்சியின் மேலிடத்திற்கு தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, கூட்டணி நீடிக்குமா, அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்குமா என்ற பரவலான பேச்சுகள் ஏற்பட்டுள்ளது.