ஒற்றைத் தலைமை விவகாரம் 12ல் அதிமுக ஆலோசனை கூட்டம்
தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா எழுப்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் வரும் 12ம் தேதி கூட்டப்பட்டுள்ளதுநாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வென்றது. பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியில் பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததே தப்பு என்ற ரீதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் வெளிப்படையாக பேசினர்.அதையும் தாண்டி, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவும், மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ராசன் செல்லப்பா, கட்சித் தலைமையே சரியில்லை என்று ஒரே போடாக போட்டார்.
மதுரையில் அவர் 8ம் தேதி காலையில் திடீரென செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார். கட்சியில் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்ட, செல்வாக்கு மிக்க ஒருவர் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை. தற்போது ஆளுமைத் திறனுடைய தலைவர்கள் கட்சிப் பொறுப்பில் இல்லை. 2 பேர் தலைமை பொறுப்பில் இருப்பதால் எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியவில்லை. அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனே பொதுக் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒற்றைத் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் பலவற்றையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்து ஒரு வீடியோ பதிவு செய்தார். அதில், கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்றதோடு நில்லாமல், தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக கழகத்தை வளைக்க நினைப்பவர்களை கண்டால் வேதனை அளிக்கிறது என்று மறைமுகமாக ஓ.பி.எஸ்.சை தாக்கியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டுமென்று நேரடியாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்து கேட்டது, எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை உண்டாக்கியது. பதிலுக்கு எடப்பாடி தரப்பினர், முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்தியலி்ங்கத்திற்கு அமைச்சர் பதவி தருமாறு பா.ஜ.க. தலைமையிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால், இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.
இந்த விஷயம், ராஜன்செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் பேட்டிகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டன. இதையடுத்து, இந்த விவகாரம் குறி்த்து ஆலோசிப்பதற்காக வரும் 12ம் தேதி சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என்றும், கட்சியின் பொதுக் குழுவை கூட்டி மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.