இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி
இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமராக 2வது முறை பதவியேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவுக்கு நேற்று சென்றார். அங்கு தனது பயணத்தை முடித்து கொண்டு இன்று அவர் இலங்கைக்கு சென்றார். கொழும்புவில் அவரை அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் வரவேற்றனர். இலங்கை சென்றதும் மோடி, ‘கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக இலங்கை வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. இந்தியா தோழமை நாடுகளை மறக்காது’’ என்று ட்வீட் செய்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று கொழும்புவில் தேவலாயங்கள் மற்றும் ஓட்டல்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகளால் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 250 பேர் வரை பலியாகினர். குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு தேவலாயத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி சென்று, அங்கு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்ட ட்வீட்டில் ‘‘இலங்கை மீண்டும் உறுதியான நாடாக எழுந்து நிற்கும். இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களில் இலங்கையை அச்சுறுத்தி விட முடியாது. இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கொழும்புவில் அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்கிரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சே ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகளும் மோடியை சந்திக்கவிருக்கிறார்கள்.