வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி... ஓய்வு பெற்ற நர்ஸ் பாட்டியுடன் சந்திப்பு
ராகுல்காந்தி தான் பிறந்த பொழுது, மருத்துவமனையில் தன்னை முதன்முதலில் தூக்கிக் கொஞ்சியகேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் பாட்டியை இன்று திடீரென சந்தித்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பழைய நினைவுகளைப் பற்றியும் பேசி மகிழ்ந்தார்.
கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான ராஜம்மா.நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 48 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு டெல்லியில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். அந்த சமயத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மருமகளும், தற்போதைய காங்கிரஸ் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி பிரசவத்திற்காக ராஜம்மா பணியாற்றிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் குடும்பத்து மருமகள் என்ற படாடோபம் எதுவும் இன்றி சோனியா சேர்க்கப்பட்டாலும், மருத்துவமனை ஊழியர்களை பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் சோனியாவுக்கு அழகான ஆண் குழந்தை (அவர் தான் ராகுல் காந்தி) பிறந்தது. பிறந்த குழந்தையை மடியில் தூக்கி முதன் முதலில் தான் கொஞ்சியதாக ராஜம்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
48 வருடங்களுக்கு முன்பு, பிறந்தவுடன் முதன் முதலில் தான் தூக்கி கொஞ்சிய குழந்தை ராகுல் காந்தி. இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகி நான் வசிக்கும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது அதிர்ஷ்டம் தான். தேர்தல் பிரச்சாரத்திற்கு வயநாட்டிற்கு ராகுல் காந்தி வந்த போது வெளியூர் சென்றிருந்தேன். அதனால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவருக்காக இங்கு வந்து ஓட்டுப் போட்டு விட்டேன். இன்னொரு வயநாட்டிற்கு ராகுல் வரும் போது பார்க்க ஆவலாக உள்ளேன். அவரை குழந்தையாக தூக்கிக் கொஞ்சிய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன் என்று தனது ஆர்வத்தையும், விருப்பத்தையும் நர்ஸ் ராஜம்மா பாட்டி தெரிவித்திருந்தார். இதனால் ராஜம்மா பற்றிய செய்தி தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் பரபரப்பாகி இருந்தது.
இந்நிலையில் தான் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார் ராகுல் காந்தி.தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக கேரளா வந்துள்ள ராகுல்காந்தி, சாலையில் ஊர்வலம் நடத்தி நன்றி தெரிவித்து வருகிறார். இன்று 3-ம் நாள் நன்றி அறிவிப்பு பயணத்தை தொடர்ந்த ராகுல் காந்தி, ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மாவை திடீரென அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்பொழுது பழைய நினைவுகளை பற்றி ராஜம்மாவிடம் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து ராஜம்மா கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ராகுல்காந்தி பிறந்தபோது அருகிலிருந்த நர்ஸ்களில் நானும் ஒருவர். அவருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். பலாப்பழத்தால் செய்யப்பட்ட சிப்ஸையும், இனிப்பையும் ராகுல் காந்திக்கு வழங்கி உபசரித்தேன் என்றார்.