நாட்டிலேயே சுகாதாரத்தில் தமிழகத்திற்கு 3வது இடம்: முதல் இடத்தை தட்டிச்சென்றது கேரளம்
புதுடெல்லி: நாட்டிலேயே சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் கேரளம் முதலிடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும், உ.பி கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டில் திட்டக் குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார்.
இந்நிலையில், நிதி ஆயோக் தற்போது நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் இன்று வெளியிட்டார். இதில், நாட்டில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என இரு பிரிவுகளாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரள மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து, பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய இடங்களில் ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்து இடம்பிடித்துள்ளன.
சிறிய மாநிலங்கள் பட்டியலில், மிசோரம் முதல் இடத்தையும், மணிப்பூர் இரண்டாவது இடத்தையும், கோவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், “சுகாதாரத்துறையில் கூட்டுறவு மற்றும் போட்டி கூட்டாட்சி முறையை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக செயல்பட்டு சுகாதார விளைவுகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்கும் வகையில் இந்த குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என கூறினார்.