புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார்
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில மூத்த திமுக தலைருமான ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.
78 வயதான ஆர்.வி.ஜானகிராமன் 1941 -ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி புதுச்சேரியின் வில்லியனூரில் பிறந்தவர். ஆரம்ப காலம் முதல் திமுகவில் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். 1985-ல் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வானார். 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை புதுச்சேரி மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்துள்ளார்.
1985-ம் ஆண்டு முதல் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.வி.ஜானகிராமன் 5 முறை இதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை மாநில முதல்வராக இருந்த ஆர்.வி.ஜானகிராமன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். திமுக தலைவராக இருந்த கருணாநிதி, புதுச்சேரிக்கு வரும் போதெல்லாம் அவருக்கு காரோட்டியாக செயல்பட்டவர் ஆர்.வி.ஜானகிராமன்.
உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருடைய உடல் புதுச்சேரி வில்லியனூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உள்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆர்.வி.ஜானகிராமனின் இறுதிச் சடங்குகள் நாளை காலை, சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.