ஆபாச நடனமாடச் சொல்லி பெண்களை மிரட்டிய கும்பல்
அசாமில் கலாச்சார விழா ஒன்றில் நடனமாடிய பெண்களிடம் ஆடைகளை களைந்து விட்டு நடனமாடக் கூறி மிரட்டியது ஒரு கும்பல். அவர்களிடம் தப்பியோடிய நடன மங்கைகள், காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம், காமரூப் மாவட்டத்தில் சாய்க்கான் காவல் நிலைய எல்லைக்குள் அடங்கிய ஒரு கிராமத்தில் கடந்த வாரம் திருவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ஞாயிறன்று இரவு ஒரு அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் சில பெண்கள் நடனமாடினர். அப்போது ஒரு கும்பல் மேடையில் ஏறி, அந்த பெண்களை சுற்றி வளைத்தனர். அந்த பெண்களிடம், ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக நடனமாடுமாறு வற்புறுத்தினர். அதற்கு அந்த பெண்கள் மறுத்தனர். ஆனாலும், அந்த கும்பல் அவர்களை மிரட்டவே, அந்த பெண்கள் மேடையில் இருந்து குதித்து தப்பியோடினர். அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அந்த பெண்கள் அங்கிருந்து அசல்பாரா பகுதிக்கு தப்பிச் சென்று காவல் துறையிடம் புகார் அளித்தனர். காவல் துறையினர் வந்து விசாரித்த போது, ஆபாச நடனமாடுவதற்காக மேற்கு வங்கத்தின் கூச்பெகார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாகக் கூறி, அதிகான விலைக்கு அரங்கு டிக்கெட்டுகளை விற்றிருப்பது தெரிய வந்தது. அதை எதிர்பார்த்து வந்த சுமார் 500 பேர் அடங்கிய கும்பல் ஏமாற்றத்தில், மேடையேறி தகராறு செய்ததால்தான் அங்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது.
இதையடுத்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஷாரூக்கான், சுபாகன் கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.