உலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்
உலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வெடுப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
கடந்த 19 ஆண்டுகளாக 400 சர்வதேச போட்டிகளில் அதிரடியாக ஆடிய வீரர் யுவராஜ் சிங். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக தனது ஃபார்மை இழந்த, யுவராஜ் சிங், அந்த புற்றுநோயை தனது விடாமுயற்சியால் வென்று, மீண்டும் அணியில் சேர்ந்தார்.
கடந்த உலகக் கோப்பையையில் இடம்பிடித்து இருந்த யுவராஜ் சிங் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து யுவராஜ் சிங்கின் ஃபார்ம் குறைந்தது மட்டுமின்றி, இளைஞர்களின் ஆதிக்கம் இந்திய அணியில் அளப்பறியதாக மாறியுள்ளது.யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, காம்பீர் போன்ற வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இருந்தாலும், இடையிடையே கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக விளையாடி யுவராஜ் சிங் பயன்படுத்தி வந்தார்.
எப்படியாவது இந்த உலகக்கோப்பையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
தோனி, தினேஷ்கார்த்திக் என இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம்பிடித்ததால் ரிஷப் பன்ட்க்கே உலகக்கோப்பையில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், யுவராஜ் சிங்கிற்கு எவ்வாறு இடம் கிடைக்கும் என்ற நிலை இந்திய அணியில் உருவானது.
2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்டுவர்ட் போர்ட்டின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங், இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலகளவில் யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது. ”கிரிக்கெட் தான் எனக்கு எப்படி போராடுவது, எப்படி வீழ்வது, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை கற்றுக் கொடுத்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.