அரபிக் கடலில் வாயு புயல் கேரளாவில் மழை கொட்டும்
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.
அரபிக் கடலில் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 760 கி.மீ. தூரத்தில் ‘வாயு’ என்று அழைக்கப்படும் புயல் மையம் கொண்டிருக்கிறது. இது தற்போது குஜராத் கடலோரமாக 80 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அனேகமாக, வரும் 13ம் தேதியன்று போர்பந்தர் மற்றும் மகுவாவுக்கு இடையே 130 கி.மீ. வேகத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், குஜராத்தில் பேரிடர் மீட்பு படை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ உதவிகள் பெறுவதற்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளன. தற்போது வாயு புயலால் மும்பை உள்பட மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளிலும் குஜராத் கடலோரப் பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது
அதே போல், கேரளா, கர்நாடகா, கொங்கன் மண்டலம் போன்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்து வருகிறது. கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்திருக்கிறது.
மேலும், குற்றால அருவிகளில் தண்ணீர் பெருகி வருகிறது. புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நெல்லையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.