இறந்த குட்டியை தூக்கியபடி இறுதி ஊர்வலமாக செல்லும் யானைகள் - நெகிழ வைக்கும் வீடியோ
கர்நாடக வனப் பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று இறந்து போன குட்டி யானையைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் செல்வது போல், அமைதியாக அலைந்து செல்லும் வீடியோ ஒன்று பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.
ஆறறிவு படைத்தவன் மனிதன் என்கிறோம். ஆனால் சில சமயங்களில் ஐந்தறிவு படைத்த பிற ஜீவன்களை விட மோசமாக நடந்து கொள்வதை நாம் அடிக்கடி பார்க்கும் அவலம் நிலை தற்போது சகஜமாகி விட்டது. ஆனால் ஐந்தறிவு படைத்தவை எனக் கூறப்படும் யானைகள் கூட்டம் ஒன்று, இறந்து விட்ட குட்டி யானை ஒன்றின் சடலத்தை தூக்கிக் கொண்டு அதனை பத்திரமாக அடக்கம் செய்ய ஊர்வலம் போல் செல்லும் காட்சி ஒன்று அனைவரின் நெகிழச் செய்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் கஸ்வானா என்ற வனத் குறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் எடுத்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், யானை ஒன்று இறந்து போன தனது குட்டியை துதிக்கையால் தூக்கியபடி சாலையைக் கடந்து நிற்கிறது. சில நொடிகள் கண்ணீருடன் காத்திருக்கும் வேளையில் அதன் பின்னால் 3 குட்டிகளுடன் மேலும் சில யானைகள் வந்து சாலையில் குழுமி நிற்கின்றன. இறுதியாக மற்றொரு யானை இறந்த குட்டியைத் தூக்கிக் கொண்டு வனத்திற்குள் செல்கிறது. மற்ற யானைகளும் வரிசையாக பின் தொடர்ந்து செல்சின்றன. இக்காட்சியை அவ்வழியே சாலையில் சென்ற பலர் கும்பலாக நின்று வேடிக்கையும் பார்க்கின்றனர்.
பொதுவாக சிம்பன்ஸி, கொரில்லா போன்ற சில குரங்கு வகை உயிரினங்களும் இப்படி நடந்து கொள்வது வழக்கம் என்று கூறப்படுவதுண்டு. அதே போல யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரவீன் கஸ்வான், அந்த வீடியோவுடன், தகவலையும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது.