ராஜன் செல்லப்பாவைப் போல் பல எம்.எல்.ஏ.க்கள் குமுறுகிறார்கள்: திவாகரன் பேட்டி
அண்ணா திராவிடர் கழக 2ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொடியேற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
எடப்பாடி அரசு குறித்து அ.தி.மு.க.வினர், தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். ஜெயலலிதா மறைந்த போதே அ.தி.மு.க.விற்கு நெருக்கடி காலம் தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் வீழ்ச்சியை ஒப்புக் ண்டு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
தினகரன் ஒரு அரசியல் கோமாளி. சசிகலா சிறைக்கு செல்ல காரணமே அவர்தான். அவரை சார்ந்து வந்தவர்களை ஆட்டுமந்தை போல் நடத்தினார். அதில் விடுபட்டு ஒவ்வொருவராக வேறு இயக்கங்களுக்கு செல்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடைய சொந்தங்களுக்கே சீட் கொடுக்கப்பட்டது. எனவே, அ.தி.மு.க.வினர் விழித்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று தொடர்ந்து நடந்தால் அ.தி.மு.க. சரிவையே சந்திக்கும். சசிகலாவினால் தக்க வைக்கப்பட்ட அ.தி.மு.க அரசுதான் இப்போதும் நடந்து வருகிறது.
மத்திய அரசை கண்டு பயப்படுபவர்கள், ஆட்சியில் இருந்து விலக வேண்டும். இரட்டை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறிய கருத்து சரியானதுதான். அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக்கசப்பில் உள்ளனர். அவர்களின் குமுறலை கேட்க வேண்டும்.
குறிப்பிட்ட 4 அமைச்சர்கள்தான் எடப்பாடி அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்டி அதில் தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.