அமமுகவில் அடுத்த விக்கெட் காலி... முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவில் ஐக்கியம்
டிடிவி தினகரனின் அமமுக கூடாரத்தில் இருந்து, அதிமுக பக்கம் அடுத்தடுத்து நிர்வாகிகள் பலர் கட்சி தாவுவது தொடர்கிறது .இப்போது முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தினகரன் கட்சியிலருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்துள்ளார்.
எம் ஜிஆர் கட்சியை தொடங்கிய காலத்தில் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தாமரைக்கனி. விருதுநகர் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்.ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தாமரைக்கனியை கட்சியை விட்டு வெளியேற்றினார். பதிலுக்கு அவருடைய மகன் இன்பத்தமிழனை கட்சியில் சேர்த்து 2001-ல் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெறச் செய்தார். பின்னர் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. இதனால் தாமரைக்கனிக்கும், இன்பத் தமிழனுக்கும் இடையே தந்தை மகன் என்ற உறவில் கூட விரிசல் ஏற்பட்டது ஊரறிந்த சங்கதி.
பின்னர் ஜெயலலிதா இன்பத் தமிழனையும் ஓரம் கட்டினார். இதனால் 2006-ல் திமுகவில் இணைந்தார். ஆனால் எங்கும் நீடிக்காத இன்பத் தமிழன், 2009-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் டிடிவி தினகரன் தலைமையேற்று அமமுகவில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார் இப்போது டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய இன்பத் தமிழன், இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதை சாதகமாக்கி, அவர்களை அதிமுக பக்கம் இழுக்கும் பணி ஜரூராக நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர். அடுத்ததாக குமரி மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட பல அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் அமமுக கூடாரம் கலகலத்துப் போயுள்ளது என்றே கூறப்படுகிறது.