தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரி

‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில், ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை எனக்கூறி போலி அதிகாரி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவருமானவர் ஜெ.தீபா. இவரது வீடு தி.நகரில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை ஜெ.தீபாவின் வீட்டிற்கு திடீரென வருமான வரி சோதனைக்காக வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ஜெ.தீபாவின் வீட்டிற்கு கூடுதல் அதிகாரிகளும், போலீசாரும் வந்தவுடன் சோதனை துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், சில நிமிடங்களில் அதிகாரி என கூறி வந்த நபர் தப்பி ஓடினார். பிறகு தான், மித்தேஷ் குமார் வருமான வரித்துறை அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். மேலும், இந்த வருமான வரித்துறை என ஜெ.தீபாவின் வீட்டிற்கு வந்தது யார் என்பது குறித்தும், வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

More News >>