மக்களவை துணை சபாநாயகர் யார்? ஒய்எஸ்ஆர் கட்சிக்கு பாஜக தூண்டில் ... மவுனம் சாதிக்கும் ஜெகன்

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகனின் அசுர வளர்ச்சி அனைவரின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.ஆந்திராவில் இம்முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத பாஜக, ஜெகன் மோகன் ரெட்டியை வளைத்துப் போட்டு அம்மாநிலத்தில் காலூன்ற திட்டமிடுகிறது. இதனால் ஜெகன் மோகனிடம் பிரதமர் மோடியும், மற்ற பாஜக தலைவர்களும் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக மக்களவைத் துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வழங்க பாஜக முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சர் பதவிக்கு இணையான பதவி இது.பொதுவாக துணை சபாநாயகர் பதவியை, ஆளுங்கட்சி வைத்துக் கொள்ளாமல் எதிர்க்கட்சி வரிசையில் அல்லது நட்புக் கட்சிகளுக்கு வழங்கப்படுவது மரபு. கடந்த ஆட்சியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்காத அதிமுகவுக்கு வழங்கப் பட்டு, தம்பித்துரை துணை சபாநாயகராக இருந்தார். இந்த முறை 22 எம்.பி.க்களை பெற்றுள்ள ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஜெகன் மோகன்ரெட்டியோ தயக்கம் காட்டுகிறாராம்.

இதனால் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான நரசிம்மராவ், நேற்று ஜெகன் மோகனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேச்சு நடத்தினார். ஆனாலும் ஜெகன் மோகன் பிடி கொடுக்கவில்லையாம்.

இதற்குக் காரணம், ஆந்திராவில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை வாக்குகளை ஜெகன் மோகன் இம்முறை அறுவடை செய்தது தான். பாஜகவுடன் நெருங்கினால் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சப்படுகிறாராம். இதனால் யோசித்து முடிவெடுப்பதாக ஜெகன் மோகன் கூறிவிட்டாராம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 15-ந் தேதி டெல்லி செல்கிறார் ஜெகன் மோகன். அங்கு பிரதமரையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் ஜெகன் மோகன் தனியாக சந்திக்கவும் உள்ளார். அப்போது அவரை சரிக்கட்டி விடலாம் என பாஜக நினைக்கிறதாம். இதனால் துணை சபாநாயகர் பதவியை ஏற்க ஜெகன் மோகன் சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது 15-ந் தேதி தெரிந்து விடும்.17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் முடிந்தவுடன் 19-ந்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>