மாயமான விமானத்தின் பாகங்கள் மலைக் காட்டுக்குள் கண்டுபிடிப்பு
மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 13 பேரின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவில்லை. அந்த இடத்தில் தேடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
கடந்த 3ம் தேதியன்று, அசாமில் உள்ள ஜோர்காட் தளத்தில் இருந்து, இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்திற்கு பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானக் குழுவினர் 8 பேரும், பயணிகள் 5 பேரும் விமானத்தில் சென்றனர். இந்த விமானம் பகல் 1 மணிக்கு பிறகு, ரேடார் வளையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது.
அதன்பிறகு, விமானப் படையின் கட்டுப்பாட்டு அறை முயற்சித்தும் விமானத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவே இல்லை. விமானம் எப்படி மாயமானது? அதிலிருந்த 13 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
காணாமல் போன விமானம் ஏஎன்32 என்ற ரகத்தைச் சேர்ந்தது. இந்த ரகம் ரஷ்யத் தயாரிப்பு விமானமாகும். இந்த ரக விமானங்கள் கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக, விமானத்தை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்றது. பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் வானிலை மோசமாக உள்ளது. ஆயினும் விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடந்தது. இந்த பணியில் இந்திய ராணுவமும் இணைந்து ஈடுபட்டது.
மாயமான விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று விமானப் படை அதிகாரிகள் சந்தேகித்தனர். நிலப்பரப்பை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மூலமாக அருணாச்சலில் சுமார் 500 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணித்து பார்த்ததிலும் எந்த தடயமும் சிக்கவி்ல்லை.
மேலும், பருவ மழைக் காலம் தொடங்கி விட்டால் அடர்ந்த காட்டுக்குள் மக்கள் செல்வதில்லை. எனவே, கிராம மக்கள் அந்த விமானப் பாகங்கள் எங்காவது கிடக்கிறதா என்பதை பார்க்க காட்டுக்குள் செல்வதை ஊக்குவிப்பதற்காக ரூ.5 லட்சம் சன்மானம் தருவதாக விமானப்படை அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், லிப்போவுக்கு வடக்கே 16 கி.மீ. தூரத்தில் 12 ஆயிரம் உயரம் கொண்ட மலைக் காட்டுக்குள் விமானத்தின் பாகங்கள் இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில் இது தெரிய வந்தது. எனினும், அந்த பகுதியில் அடர்ந்த காடாக இருப்பதால் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இதைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு அருகில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வாய்ப்புள்ள பகுதியை விமானப்படையினர் கண்டுபிடித்தனர். இரவில் மீட்பு பணி சிரமம் என்பதால், இன்று காலையில் அந்த இடத்திற்கு விமானப்படையின் மீட்பு குழு சென்றுள்ளது. விமானத்தின் பாகங்கள் தென்பட்டாலும் அதிலிருந்த பயணிகளின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. மீட்புக் குழு சென்று பார்த்த பின்புதான் அது பற்றிய தகவல் வரும்.
ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டில் சென்னை விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற இதே ஏ.என்.32 ரக விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை நீண்ட காலமாக விமானப்படை தேடி வந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வங்கக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடலில் நீண்டநாட்களாக தேடப்பட்டது. கடைசியில் விமானத்தில் இருந்த 29 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.