திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக கிறிஸ்தவர் நியமனமா? ஆண்டாண்டாக தொடரும் சர்ச்சை
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார்.
உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார இந்து கோயில் என்றால், அது திருப்பதி ஏழுமலையான் கோயில்தான். இந்த கோயிலை திருமலா-திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த போர்டு உறுப்பினர்களுக்கே தனி மவுசுதான். அதிலும் சேர்மன் பதவி என்பது ஆந்திர கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பாக, திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் பதவியில் தனது தாய் வழி மாமாவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பம்.
இதனால், சுப்பாரெட்டியும் கிறிஸ்தவர் என்று கூறி, அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடந்த 4 நாட்களாக கருத்துகள் வெளியாகி வருகின்றன. அவர் தீவிரமான கிறிஸ்தவப் பிரச்சாரகர் என்றும் ஏழுமலையான் கோயில் பணத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் போகிறார் என்றும் குற்றம்சாட்டும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.இந்நிலையில், சுப்பாரெட்டி அந்த குற்றச்சாட்டுகளை ஓங்கி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘நான் நூறு சதவீத இந்து. ஜெகன் மோகனின் தந்தை வழியில் உள்ளவர்கள்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். நான் தாய் வழி உறவினர். நான் எப்போதுமே இந்துதான். ஆண்டுதோறும் சபரிமலைக்கு விரதம் சென்று வருகிறேன். சில மாதங்களுக்கு ஒரு முறை சீரடிக்குப் போய் வருகிறேன். எனது ஐதராபாத் வீட்டிற்கும், ஓங்கோல் வீட்டிற்கும் வந்து பார்த்தவர்கள் எல்லோருக்குமே நான் தீவிரமான இந்து என்பது நன்றாக தெரியும். ஆனால், வேண்டுமென்றே சிலர் என்னை கிறிஸ்தவர் என்று துஷ்பிரச்சாரம் செய்து எனது இமேஜை கெடுக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
ஓங்கோல் தொகுதி முன்னாள் எம்.பி.யான சுப்பாரெட்டி மேலும் கூறுகையில், ‘‘ராஜ்ய சபா தேர்தல் வரும் வரை நான் இந்தப் பதவியில் இருக்க வேண்டுமென்று ஜெகன் என்னிடம் கேட்டார். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று நினைத்து இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்’’ என்றார்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்ட போதும், அவர் கிறிஸ்தவர் என்ற பிரச்னை எழுந்தது. கிறிஸ்தவப் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களும் அப்போது வைரலாக வெளியானது. அதன்பின்பு அவர், தான் ஒரு அரசியல்வாதியாக கிறிஸ்தவக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால் எப்போதுமே இந்து மதத்தையே பின்பற்றுவதாகவும் விளக்கம் அளித்தார்.
திருப்பதி கோயிலுக்குள்ளேயே இந்துக்கள் அல்லாதவர்கள் பலரும் வேலை பார்ப்பதாக 1986ம் ஆண்டிலேயே பெரிய பிரச்னை ஏற்பட்டது. அப்போது தேவஸ்தானத்தில் பணியாற்றிய ஒரு பெண் அதிகாரி, தேவஸ்தான ஜீப்பிலேயே தினமும் தேவாலயத்திற்கு சென்று வருவதாகவும் புகார் எழுந்தது. கடைசியில் அது குறித்து விசாரணை நடத்தி, அது உண்மை என கண்டறியப்பட்டு அவர் மாற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, தேவஸ்தானப் பணிக்கு இந்துக்கள் அல்லாதவர்களை நியமிக்கக் கூடாது என்று 1988ல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தேவஸ்தானம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாற்று மதத்தினர் வேலை பார்த்து வந்தனர். அதற்கும் எதிர்ப்புகள் வந்ததால், கடந்த 2007ம் ஆண்டில் இருந்து கல்வி நிறுவனங்களிலும் மாற்று மதத்தினர் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. அதன்பின்பும், மாற்றுமதத்தினர் தேவஸ்தானத்தில் பணியாற்றுவதாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி செய்தி வெளியிட்டது. இதன்பிறகு, தேவஸ்தானப் பணியில் இருந்த மாற்று மதத்தினர் 35 பேரை வேறு அரசு துறைக்கு மாறுதல் செய்தனர்.