இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்பா?-கோவையில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்.ஐ.ஏ உயர் அதிகாரி விக்ரம் தலைமையில் கொச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடக்கிறது. இதேபோன்று குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 8 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தொடர் குண்டு வெடிப்பு கொடூரம் நடந்தது. இதில் 300 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு படுகொலைச் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதனால் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்த அடிப்படையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் சமூக வலைதளம் மூலம் தொடர்புள்ளவர்களை குறிவைத்து கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.