டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக கூட்டத்தில் அழைப்பில்லை
அதிமுகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு டி.டி.வி. ஆதரவு நிலையில் இருந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் வெளியில் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே மறைத்து கட்சியை நடத்துவதற்கு எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி பண்ணியும் அது நடக்கவி்லலை. மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா, ‘கட்சிக்கு யாருக்கு அதிகாரம்? ஒற்றைத் தலைமை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியவி்லலையே...’’ என்று கொளுத்திப் போட்டு விட்டார்.
அவர் என்ன பேசினார், அதற்கு என்ன நடவடிக்கை என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முடிவெடுப்பதற்குள் அடுத்த எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன், செல்லப்பாவின் கருத்தை ஆமோதித்து பேசி வீடியோ வெளியிட்டு விட்டார். அது மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வளமைக்காக சுயநலத்துடன் கழகத்தை வளைத்து செயல்படக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்தை போட்டு தாக்கினார். அதாவது, ‘‘ஓ.பி.எஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி பெறுவதற்காக கட்சியை காவு கொடுக்கிறார்’’ என்று மறைமுகமாக குத்திக் காட்டினார். அதே சமயம், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ‘‘அம்மா இருந்தால் ராஜன்செல்லப்பா இப்படி பேசுவாரா?’’ என்று செல்லப்பாவுக்கு எதிர்ப்பு காட்டினார்.
இது இன்னும் பெரிய சர்ச்சையாகி விடாமல் தடுப்பதற்காக ஜூன் 12ம் தேதி அ.தி.மு.க. அமைச்சர்்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இணைந்து அறிக்கை வெளியிட்டனர். கட்சிப் பிரச்னைகளை யாரும் வெளியில் பேசக் கூடாது என்றும் அறிக்கை விட்டனர்.
இந்நிலையில், இன்று காலையில் அந்த கூட்டம் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக இருந்த அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் இதை உறுதி செய்தனர்.
இந்த மூவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு ஏற்கனவே சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.