செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு அதிமுகவில் திடீர் கட்டுப்பாடு

அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, ‘கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்று கொளுத்திப் போட்டதற்கு பிறகு குன்னம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏவும் அதை ஆமோதித்து பேசினார். ஆனால், அந்த ஒற்றைத் தலைமை ஓ.பி.எஸ் என்பது போல் ராஜன்செல்லப்பாவும், அது இ.பி.எஸ்.தான் என்பது போல் குன்னம் ராமச்சந்திரனும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், எடப்பாடி, ஓ.பி.எஸ், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது. அதிலேயே யாரும் ஏடாகூடமாக பேசி விடக்கூடாது என்பதற்காக யாருக்கும் பேச அனுமதி தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஊடக விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக, தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி இருக்கும் வேளையில், செய்தி தொடர்பாளர்கள் தலைமைக் கழகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க ேவண்டாம்’’ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என கூறப்பட்டிருக்கிறது.

இது பற்றி, செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் நாம் கேட்ட போது, ‘‘இன்றைய கூட்டம் குறித்தோ அல்லது ஒற்றைத் தலைமை போன்ற விஷயங்கள் குறித்தே விவாதங்கள் நடப்பதை தலைமை விரும்பவில்லை. அதனால், தற்காலிகமாக ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையே இந்த தடை விலக்கப்பட்டு, விவாதங்களில் பங்கேற்போம்’’ என்றார்.

More News >>