இலங்கை குண்டு வெடிப்பு சதிகாரனுடன் தொடர்பு உறுதியானது.... கோவையில் என்ஐஏ சோதனை இன்றும் நீடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரனுடன் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் முகம்மது அசாருதீன் என்பவனை என்ஜஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்றும் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு நகரில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 300 பேர் வரை கொல்லப்பட்டனர் 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த கொடூர குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜஹ்ரான் ஆஷ்மி என்பவன் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைத்தளங்களில் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த சிலரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கொச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் கோவையில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை போலீசாரின் துணையுடன் 8 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன், போத்தனூர் சாலை திருமால் நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா, குனியமுத்தூர் அபுபக்கர், போத்தனூர் மெயின் ரோடு உம்மர் நகரை சேர்ந்த சதாம் உசேன், தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷாஆகியோரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீனின் டிராவல்ஸ் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் முகமது அசாருதீனின் அலுவலகத்தில் இருந்து லேப்டாப், டைரி, பென்டிரைவ் உள்பட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனையின்போது ஏர்கன்னில் பயன்படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்குகள், ஒரு இன்டெர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நோட்டீசுகள், கையேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஆஸ்மியுடன், சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் முகமது அசாருதீன் தொடர்பில் இருந்ததும், கோவையைச் சேர்ந்த பலரையும் பேஸ்புக் குழுவில் சேர்த்ததும் இவன் தான் என்பதும் தெரிய வந்தது. இதனால் உடனடியாக முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துதொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவையில் இன்றும் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதில், அன்புநகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபிபுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. என்ஐஏ அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான மேலும் பல ரகசியங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

More News >>