திசைமாறி குஜராத்தை மிரட்டிய வாயு புயல்.. 3 லட்சம் பேர் வெளியேற்றம்
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி தீவிரமடைந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்தது. இது மேலும் வலுப்பெற்று சூறாவளிப் புயலாக உருமாறி இன்று காலை குஜராத் மாநிலம் துவார்கா மற்றும் வேரவல் இடையே கடற்கரையோரமாக நகர்ந்து சென்றது.
புயல் கடற்கரையோரம் நகரும் போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு துரிதமாக மேற்கொண்டது. குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.அகமதாபாத்தில் இருந்து போர்பந்தர், டையூ, காண்ட்லா, முந்த்ரா மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போர்பந்தர், காந்திதாம், பாவ்நகர், புஜ் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. குஜராத்தின் முக்கிய துறைமுகமான காண்ட்லா துறைமுகம் மூடப்பட்டுள்ளது.மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கோகன், தானே, மும்பை, ரத்தன்கிரி கடற்கரைகளில் இன்று மற்றும் நாளை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடற்கரையோரத்தில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
புயலை எதிர்கொள்ள ராணுவ படைப்பிரிவினர், தேசிய பேரிடர் மீட்பு படையின் 45 பேரைக் கொண்ட 39 குழுக்கள், கடலோர காவல்படையினர் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.வாயு புயல் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதிப்புகளை தடுக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘வாயு’ புயலைச் சமாளிக்க கடற்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக மேற்கு மண் டல கடற்படை அறிவித்துள்ளது.மீட்புப் பணிகளில் ஈடுபட விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற் படை படகுகள், கப்பல்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலே குஜராத்தின் போர் பந்தர், சவுராஷ்டிரா பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகரித்து 150 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. பலத்த காற்றால் குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற சோம்நாத் ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கூரை சேதமடைந்தது. வாயு புயல் மேலும் வலுப்பெற்று குஜராத் கரையோரமாக வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் இரு நாட்களுக்கு புயல் பாதிப்பு இருக்கலாம் என்பதால் குஜராத்தில் கடற்கரையோர பகுதிகளில் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.